கந்தர் சஷ்டி விரதம்




”சஷ்டியை நோக்க சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்” என்று ஆரம்பிக்கும் கந்த சஷ்டி வரிகள் நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

பொதுவில் தினமும் நாம் பாராயணம் செய்வதற்காகவும் அதிலும் முக்கியமாக சஷ்டி தினத்தன்றும் செய்வதற்காகவே தேவராய ஸ்வாமிகளால் பாடப்பட்ட நூல் கந்தர் சஷ்டி கவசம்.


பொருள்: சரவணப் பொய்கையில் அவதரித்த முருகப் பெருமானுக்குரிய சஷ்டி விரதத்தை மேற்கொண்டால் செந்நிறக்கதிர்களை வீசும் வேலுடைய வேலன் அடியார்களுக்கு சஷ்டி விரதப் பலன்களைக் கொடுப்பார்.

முருகனுக்குரிய விரதங்கள்:

[1] வார   விரதம்
[2] கார்த்திகை விரதம்
[3] சஷ்டி விரதம்

என மூன்று வகையாக நாம் பிரிக்கலாம்.

வார விரதம்:

இது வெள்ளிக்கிழமையோ அல்லது செவ்வாய்கிழமையோ அடியார்களால் அனுஷ்டிக்கப்படும் விரதம். அன்றைய நாளில் முருகனை மனதார வழிபட்டு விரதம் இருக்க வேண்டும். இந்த இரண்டு நாட்களும் முருகனுக்கு உகந்த விரத நாட்கள் ஆகும்.

கார்த்திகை விரதம்:
முருகனுடைய நக்ஷத்ரம் கிருத்திகை ஆகும்.

 இதை சிலர் கிருத்திகை விரதம் என்றும் சொல்வார்கள். கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை நக்ஷத்திரத்தன்று இந்த விரதத்தை நாம் தொடங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு மாதம் வரும் கிருத்திகையன்று விரதம் கடைபிடிப்பது முறை. இதை நாம் ஒரு வருடத்திற்கு கூட கடைபிடிக்கலாம். இது முருகனுக்குரிய நக்ஷத்திர விரதமாகும்.

சஷ்டி விரதம்:

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் சுக்ல பிரதமையில் விரதத்தைத் தொடங்கி தொடர்ந்து சஷ்டி வரை ஆறு நாட்கள் முருகனை வழிபட்டு கடும் விரதமிருப்பது “கந்தர் சஷ்டி விரதம்”. இதனை சிலர் மகா சஷ்டி விரதம் என்றும் சிலர் கூறுவார்கள்.

ஐப்பசி மாத சஷ்டி முருகனது தோற்றத்திற்கான திருநாள். சூரசம்ஹாரம் நடைபெறும் திருநாள். ஆகவே இந்த சஷ்டியை  ”மகாசஷ்டி” என்று கூறூவது மிகவும் பொருந்தும். ஐப்பசி மாதத்திற்க்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை பிரதமை முதல் ஆறுநாள் விரதமிருப்பது சஷ்டி விரதம். இதுவே திதி விரதம். சதுர்த்தி முதற்கடவுள் முருகனின் அண்ணன் விநாயகருக்கு உரியது. ஏகாதசி கார்மேக வண்ணன் நாராயணனுக்கு உரியது. திரயோதசி இறைவன் சிவனுக்கு உரியது. சஷ்டி முருகனுக்கு உரியது. ஆகவே ஒவ்வொரு வாரத்தின் வெள்ளி அல்லது செவ்வாய்க் கிழமைகளும், ஒவ்வொரு தமிழ் மாதம் வரும் கிருத்திகை நக்ஷத்திரமும், ஒவ்வொரு தமிழ் மாதம் வரும் சஷ்டியும், ஒவ்வொரு வருடம் வரும் ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டியும் முருகனுக்கு உகந்த நாட்களாக அறியப்படுகின்றன.

இவை தவிர மாசி மகம், பங்குனி உத்திரம் முதலியனவும் முருகனை சிறப்பாக வழிபட புனித நாட்களாகும்.

விரதம் என்றால் என்ன? 

மனித உடம்பு என்பது ஒரு மரமானால் அதற்குப் பல ஆற்றல் தரும் வயிற்றுப் பகுதியே வேராகும் என்பர் சிலர். வயிறில்லாத மனிதன் இல்லை.

“வயிறோ ‘ஒருநாள் உணவை நீக்கு’ என்றால் நீக்காது. ‘அந்த உணவை இரு நாள்களுக்கும் மொத்தமாக ஏற்றுக் கொள்’ என்றால் ஏலாது” என்பது அவ்வைப்பாட்டியின் வாக்கு. எனவே அளவான உணவே வயிற்றுக்கு ஏற்றது.

மேற்சொன்ன அளவான உணவையும் உண்ணாமல் வெற்று வயிறுடன் இருப்பதே விரதம் என்பார்கள். இதையே உண்ணாவிரதம், உண்ணாநோன்பு என்றும் சொல்வார்கள்.


ஒன்றையும் பருகாமலும், உண்ணாமலும் இருப்பது முதல் நிலை. இது விதி.

துளசி தீர்த்தம், வில்வ தீர்த்தம், சங்கு தீர்த்தம் முதலிய புனிதத் தீர்த்தங்களையும், பால், மோர், இளநீர், நீர் ஆகியவைகளை மிகவும் சோர்வாக இருக்கும் பக்ஷத்தில் அருந்தி விட்டு இருப்பது இரண்டாம் நிலை.

மிகவும் சோர்வாக இருந்தால் “பலகாரம்” சாப்பிடலாம். வடமொழியில் ‘பல’ என்றால் ‘பழம்’ என்பது பொருள். அதாவது, சில பழங்களை அல்லது பழத்துண்டுகள் சிலவற்றைச் சாப்பிடுவது மூன்றாம் நிலை. இதுவும் விதிவிலக்கில் வருகிறது. (கவனிக்க: சிலர் பலகாரம் என்றால் சிற்றுண்டி என்று பொருபடும்படி எடுத்துக் கொள்கின்றனர், இது தவறு)

இதற்கு எடுத்துக்காட்டாக நாம் விதுரநீதியில் வரும் விரதத்திற்குண்டான எட்டு விதிவிலக்குகளைப் பார்க்கலாம்(கவனிக்க: விதுரநீதி மகாபாரதத்தின் ஒரு பகுதி. விதுரர் திருதராஷ்டிரருக்கு கூறிய உபதேசங்களின் தொகுப்பு இது)

”விரதங்களை மேற்கொள்ளும் போது நடுவில் 1)தண்ணீர், 2)மூலிகை, 3)பழம், 4)பால், 5)நெய் ஆகிய ஐந்தைச் சாப்பிட்டாலோ, 6)புரோகிதர் கூறுவது போல நடந்து கொண்டாலோ, 7)குருவின் கட்டளைப்படி ஏதேனும் வேலை செய்தாலோ அல்லது மருந்து சாப்பிட்டாலோ விரதத்திற்கு முறிவாக கருதப்படுவதில்லை”.

சரி விரதம் என்பதைப் பற்றி பார்த்தோம், அடுத்ததாக உபவாசத்தைப் பற்றி பார்போமா?

உபவாசம் என்றால் என்ன?

உபவாசம் என்றால் விரதம் காப்பது என்பது ஒரு பொருள்.

விரதமிருந்து கடவுளோடு வாசம் செய்வது என்பது மற்றொரு பொருள்.

எனவே ‘உபவாசம்’ என்பது விரத வழிபாடு. குறிப்பிட்ட நாள் அல்லது நாள்களில் விரதமிருந்து, மனம், மொழி, செயல்களால் கடவுளை இடையறாமல் வழிபட வேண்டும்.

கந்தர் சஷ்டி விரதம்:

முன்னர் கூறியபடி ஐப்பசி மாதம் வளர்பிறைப் பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் விரதத்தை அனுஷ்டிப்பது கந்தர் சஷ்டி விரதம். இது மிகவும் கடுமையான விரதம். ஆனாலும் கந்தனது அருள் எல்லையில் அடியார்களைக் கொண்டு சேர்க்கும் விரதம்.

ஆறு நாட்களும் விரதமிருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளான சஷ்டியன்று மட்டும் விரமிருக்கலாம். ஆறாம் நாள் இரவில் அனைவரும் உறங்கக்கூடாது. பகல் நேரங்களிலும் உறங்கக்கூடாது. முருகனது திருத்தலங்கள் பலவற்றில் அவனது வாகனமான மயில்கள் இருப்பதைக் காணலாம். இவையும் கந்தசஷ்டியின் ஆறு நாட்களும் விரதமிருக்கிறது என்பதனை நாம் சொல்லவும் வேண்டுமா?