Murugan Paamalai (முருகன் பா மாலை)

முருகனுக்கான கவிதைகள்


ரேவதி சங்கரன்
சென்னை, தமிழ் நாடு


25 பாடல்கள் கொண்ட இந்தத் தொகுப்பின் பாடல்கள் 25 நூல்களிருந்து எடுக்கப்பட்ட மலர்கள். முருகன் பாதத்தில் 25 வித மலர்களாகப் பணிவன்புடன் கௌமாரத்தில் சமர்ப்பிக்கிறோம்.

1.   கந்தர் அனுபூதிப் பாடல் - காந்தள் மலராக கந்தன் திருவடிகளில்:

நெஞ்சக்கனகல்லு நெகிழ்ந்துருக
தஞ்சத்தருள் சண்முகனுக்கியல் சேர்
செஞ்சொற்புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

பொருள்:

கல்மனமும் கரைந்து உருகுமாறு தஞ்சமென்றோரை ஆட்கொண்டு அருளும் அறுமுகப்பெருமானுக்குப் பொருந்திடும் அருமையான சொற்கோவைகளால் ஆன இப்பாமாலை சிறப்பாக அமையவேண்டும் என்று ஐங்கரனாம் ஆனைமுகன் பாதங்களில் வணங்குவோம்.

2.   குறுந்தொகை - ஆம்பல்மலராக அழகன் சேவடிகளில்:

தாமரை புரையும் காமர் சேவடி
பவழத்தன்ன மேனித் திகழ் ஒளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏமம் வைகல் எய்தின்றால் உலகே!

பொருள்:

கமலமெனச் சிவந்த திருப்பாதங்களும், பவழம்போல் சிவந்தமேனியும் குன்றிமணி போல் சிவந்த நிறத்தில் ஒளிரும் ஆடையும் கிரௌஞ்சத்தைப் பிளந்த நெடுவேலும் சேவல் கொடியும் கொண்ட முருகவேள் இவ்வுலகினைக் காப்பதால் உயிர்கள் இன்பம் அடைகின்றன.

3.   இரும்பல் காஞ்சி - குவளை மலராகக் குமரனடிக்கு:

நீலநெடுங்கொண், மூநெற்றி நிழல்நாறிக்
காலை இருள்சீக்கும் காய்கதிர்போல் - கோல
மணித்தோகை மேல் தோன்றி
மாக்கடல் சூர்வென்றோன்
அணிச்சேவடி எம் அரண்.

பொருள்:

நீலநிற மேகத்தின் உச்சியில் ஒளியோடு தோன்றிக் காலை இருளைப்போக்கும் சூரியனைப்போல, அழகிய மணிகள் போன்ற கண்களைக் கொண்ட மயில் மீது எழுந்தருளி, கடலில் ஒளித்த சூரபதுமனை வென்ற குமரக் கடவுளுடைய அழகிய திருப்பாதங்கள் எமக்குப் பாதுகாப்பாக அமையட்டும்.

4.   முத்தொள்ளாயிரம் - கடம்பமலராக கார்த்திகேயன் அடிகளில்:

மடங்கா மயில் ஊர்தி மைந்தனை நாளும்
கடம்பம் பூக்கொண்டு ஏத்தி அற்றால் -
தொடங்கு அமருள் நின்றிலங்கு வென்றி
நிறைகதிர்வேல் மாறனை
இன் தமிழால் யாம்பாடும் பாட்டு.

பொருள்:

அஞ்சி ஓடாத மயிலை வாகனமாகக் கொண்ட முருகக் கடவுளை தினமும், கடப்பமலர் கொண்டு வழிபடுவது போன்றது. போரில் நிலையான வெற்றி பெற்று விளங்கும் வேலேந்திய தலைவன் முருகனை, இனிய தமிழ்ப்பாவினால் நாம் பாடுகின்ற பாட்டு ஆகும்!

5.   திருவிளையாடற் புராணம் - வெட்சி மலராக வேலன் அடிகளில்:

கறங்கு திரைக்கடலும் கார் அவுணப் பெருங்கடலும்
கலங்க கார்வந்து உறங்கு சிகைப் பொருப்பும்
சூர் உரப் பொருப்பும் பிளப்ப மறை உணர்ந்தோர் ஆற்றும்
அறம்குலவு மகத்தழலும் அவுண மடவார் வயிற்றினழலும் மூள
மறம் குலவு வேல் எடுத்த குமரவேள் சேவடிகள் வணக்கம் செய்வாம்.

பொருள்:

அலைகள் சுழலும் கருங்கடலும், அசுரப்படைக்கடலும் கலங்கும்படியாகவும் கிரௌஞ்ச மலையும் சூரனது மார்பாகிய மலையும் பிளக்கும்படியாகவும் வேள்வியில் வேதம் பயின்றோர் எழுப்பும் யாகத்தீயும் அசுரர் குலப்பெண்கள் வயிற்றில் எழும் தீயும் மூளும்படி வீரம் குடிகொண்ட வேலாயுதக் கடவுளுடையசேவடிகளை வணங்குவோம்.

6.   திருமுருகாற்றுப்படை - வேங்கை மலராக வேலவன் அடிகளில்:

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின் செல்லேன்
பன்னிருகைக் கோலப்பா
வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா
செந்தி வாழ்வே!

பொருள்:

உன்னையன்றி யாரையும் நம்பமாட்டேன், வேறு ஒருவர் அடிபற்றி நடக்கமாட்டேன். பன்னிருகையனே! தேவர்கள் வினைதீர்த்த வேலாயுதனே! திருச்செந்தூரில் உவந்து வாழ்கின்ற பெருமானே!

7.   திருச்செந்திற் கலம்பகம் - செம்பருத்தி மலராக சேந்தன் அடிகளில்:

வரம் கொண்ட உமை முலைப்பால்
மணம் கொண்ட செவ்வாயும்
பரங்கொண்ட களிமயிலும்
பன்னிரண்டு கண்மலரும்
சிரம் கொண்ட மறை இறைஞ்சும் சேவடியும்
செந்தூரன் கரம் கொண்ட வேலும்
எந்தன் கண்ணை விட்டு அகலாவே!

பொருள்:

தாயின் பால் மணம் வீசும் செவ்வாயும், ஆடுகின்ற மயிலும் பன்னிரண்டு கண் மலர்களும் வேதங்கள் புகழும் சிவந்த பாதங்களும் திருச்செந்தூரில் முருகன் கையில் ஏந்திய வேலின் அழகும் என் கண்களைவிட்டு நீங்க மாட்டா!

8.   திருத்தணிகைச் சந்நிதி முறை - முல்லை மலராக முருகன் அடிகளில்:

வானம் அளந்தது மாயோன் திருவடி
மாயன் உந்தித் தானம் அளந்தது நான்முகன் சேவடி
தாழ்புவிபோம் ஏனம் அளந்தது வெள்ளிவெற்போன் அடி
ஏனல் வளர் கானம் அளந்தது தென் தணிகாசலன் கால் அடியே!

பொருள்:

அண்டத்தை அளந்தது திருமாலில் பாதங்கள்! திருமாலின் கொப்பூழ் இடத்தை அளந்தது பிரம்மனுடைய பாதங்கள்! திருமால் பன்றியாக உலகினைத் தோண்டிச் செல்லும்போது அப்பன்றியை அளந்தது சிவனுடைய பாதங்கள்! வள்ளியைத் திருட தினைப்பயிர்க் காட்டை அளந்தது தணிகாசலனது பாதங்கள்!

9.   காஞ்சிப் புராணம் - குறிஞ்சி மலராகக் குமரன் அடிகளில்:

முருகு ஓட்டம் தரப்பாயும் மும்மதமும் ஊற்றெடுப்ப
முரிவிற்கோட்டும் ஒருகோட்டு மழகளிற்றை
இருகோட்டு முதுகளிறா உலவக்காட்டி
பருக்கோட்ட நறைவேட்டுப் பைங்கோட்டுத் தினைப்புனத்துப்
பரண்மேற்கொண்டு குருகு ஓட்டும் பெடை மணந்த
குமரக் கோட்டத்து அடிகள் குலத்தாள் போற்றி!

பொருள்:

ஒற்றைக் கொம்பனான விநாயகனை இரு தந்தங்களுடைய கிழ யானையாக வருமாறு காட்டி கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டு அங்கே பசுங்கதிர்கள் விளங்கும் தினைப்புனத்தில் பரண்மீது நின்று ஆலோலம் கூறிய வள்ளியை மணந்த காஞ்சி குமரகோட்டத்து முருகக்கடவுள் திருவடிகளைப் போற்றுவோம்.

10.   சிதம்பரப் புராணம் - சேடல் (பவளமல்லி) மலராகச் சேயோன் அடிகளில்:

விடலரிய பெருந்தெய்வச் சிறைமீள மறைமுனிவர்
விண்ணோர் வாழ மடல் அவிழ் கற்பக நிழலும்
அரசு இருப்பும் அமர் உலகும் மகவான் எய்த
கடல் உததி ஓலமிட கிரிவிழ சூரன் உரம் கலங்க
செங்கை அடல் அயில் வேல்படை கொண்ட
ஒருகுமரன் இருசரணம் அகத்துள் வைப்பாம்.

பொருள்:

தேவர்களைச் சிறைமீட்டு, கற்பகவிட்சம் நிழல்தரும் தேவலோகத்தை இந்திரனுக்கு மீட்டுத்தரவும், கடல் அலறவும், கிரௌஞ்சம் வீழவும் சூரன் மார்பு கலங்கவும் செங்கையில் வேல்கொண்டு வெற்றி வீரனாக விளங்கும் குமரக்கடவுளின் இரு திருவடிகளையும் உள்ளத்தில் பதிப்போமாக!

11.   பிரபுலிங்க லீலை - பாதிரிமலராகப் பச்சைமயிலோன் அடிகளில்:

பாகம் ஒரு பெண் குடியிருக்கும் பரமன் அடியில் பரித்தமணி
நாகம் நுழை உற்று உடல் சுருண்டு
கிடந்து நகு வெண் தலைப் புழையில் போக
மெல்லத் தலைநீட்டிப் பார்த்து வாங்கப்போகும்
ஒரு தோகை மயில் வாகனப் பெருமாள்
துணைத்தாள் கமலம் தொழுதிடுவாம்.

பொருள்:

மாதொருபாகத்தன் அரனுடைய மேனியில் ஆபரணமாக விளங்கும் சுருண்ட பாம்பு ஒன்று, ஈசனுடைய மார்பில் சிரிக்கும் வெண்ணிற மண்டை ஓட்டில் நுழையத் தலையை நீட்டியது! உடனே பின் வாங்கிவிட்டது! காரணம் என்னவெனில் அங்கு ஒரு தோகை மயில் சென்று கொண்டிருந்ததால் அஞ்சி மறைந்தது நாகம். அந்தத் தோகைமயிலைச் செலுத்திவந்த முருகப்பெருமானின் பாத கமலங்களைப் பணிவோமாக!

12.   இலிங்கப் புராணம் - வகுளமலராக வள்ளிமணாளன் அடிகளில்:

தெய்வ யானையும் திருந்து எழில் வருமுலை சுமந்து
நையும் நுண்ணிடை வள்ளியும்
நன்கு இனிது அமரமை தவழ்ந்த பூஞ்சோலை மால் வரையக மருவும்
கையிலங்கு வேல் கடவுள் பொற் கழலிணைப் பணிவாம்!

பொருள்:

வள்ளி தெய்வானை இருவருடன் இனிது உடன் வீற்றிருப்ப மேகம் சூழும் பூஞ்சோலைகள் நிறைந்த மலைகளில் இனிது அருளும் வேலவன் குமரன் பொற்பாதங்களை வணங்குவோமாக!

13.   திருப்போரூர்ச் சந்நிதி முறை பாடல் - மல்லிகை மலராக மால்மருகன் அடிகளில்:

இல்லறத்தான் அல்லேன்;
இயற்கைத் துறவி அல்லேன்;
நல்லறத்து ஞானி அல்லேன்;
நாயினேன் சொல்லறத்தின் ஒன்றேனும் இல்லேன்;
உயர்ந்த திருப்போரூரா என்றே நான் ஈடேறுவேன்?

பொருள்:

போன்ற நான் இல்வாழ்க்கை இல்லாதவன்; துறவியும் இல்லை; ஞானியும் அல்லன்; தர்மவழியில் ஒன்றையும் செய்யாதவன்; திருப்போரூர் முருகா நான் கடைத்தேறுவது என்றைக்கோ?

14.   திருவிசைப்பா பாடல் - சண்பக மலராக சண்முகன் அடிகளில்:

மாலுலாம் மனம் தந்து என்கையில் சங்கம் வவ்வினான்
மலைமகள் மதலை மேல் உலாம் தேவர் குலமுழுதும்
ஆளும் குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேல் உலாம் கழனித் திருவிடைக்கழியில்
திருக்குராநீழற் கீழ் நின்ற வேல் உலாம் தடக்கை வேந்தன்
என் சேந்தன் என்னும் என் மெல்லியல் இவளே!

பொருள்:

என் மகள் கந்தன் மேல் காதல் கொண்டு வருந்துகிறாள்; மயக்கத்தினால் என் மகளுடைய சங்கு வளைகள் கழன்றன. அமரர் உலகத்தை ஆட்கொள்ளும் குமரவேள் வள்ளிக்கணவன், திருஇடைக்கழியில், குரவ மரத்தடியில் நின்ற வேலேந்திய கையன், சிவந்த மேனியன் - என்றெல்லாம் என்மகள் பிதற்றுகிறாளே!

15.   திருவொற்றியூர்ப் புராணம் - செம்மல் (சாதிப்பூ) மலராகச் செவ்வேள் அடிகளில்:

தன் நிகர் உயர்ச்சித்தாய சடக்கர மனுவை எண்ணித்
துன்னிய தூய வாய்மைத் தொண்டர்தம் வேட்கையெல்லாம்
இன்னிதின் யாண்டுமீதற்கு இருகை அமையா என்று
பன்னிருகரம் படைத்த பரம்பொருள் பதங்கள் போற்றி.

பொருள்:

தன்னிகர் தானென விளங்கும் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தை நினைத்து தன்னைவந்தடைந்த அடியார்கள் விரும்புகின்ற எல்லாவற்றையும் இனிதாக எவ்விடத்தும் தர இருகைகள் போதாது என்று பன்னிரண்டு கைகளைக் கொண்டுள்ள முருகனது திருவடிகளுக்கு வணக்கம்.

16.   திருச்செந்தூர்ப் புராணம் - கொன்றை மலராக குன்றுதோறாடுவோன் அடிகளுக்கு:

பன்னிருகரத்தாய் போற்றி!
பசும்பொன் மாமயிலாய் போற்றி!
முன்னிய கருணை ஆறுமுகப் பரம்பொருளே போற்றி!
கன்னியர் இருவர் நீங்காக் கருணைவாரிதியே போற்றி!
என் இருகண்ணே கண்ணுள் இருக்கும் மாமணியே போற்றி!

பொருள்:

பன்னிருகரத்தனே வணக்கம். மயிலேறும் மாணிக்கமே வணக்கம். கருணைபொழி ஆறுமுகனே வணக்கம். இருதேவியருடன் விளங்கும் கருணைக்கடலே வணக்கம். என் இரு கண்ணே கண்மணியே போற்றுகிறேன்!

17.   கந்தரலங்காரம் - மருத மலராக மாமயிலோன் அடிகளில்:

வையிற் கதிர்வடிவேலோனை வாழ்த்தி வறிஞற்கு
நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள் நுங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறு நிழல் போல்
கையிற்பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே!

பொருள்:

வடிவேலனை வாழ்த்தி ஏழைமக்களுக்கு தினமும் சிறிதாவது தருமம் செய்யுங்கள். உங்கள் உடலாலும் நீங்கள் சேர்க்கும் பணத்தாலும் எந்தவித பயனும் இல்லை!

18.   சிதம்பரச் சபாநாதப் புராணம் - செந்தாமரை மலராகச் சேயோன் அடிகளில்:

தன்நிகரில் பெருங்கருணைத்
தடங்கடலாஞ் சிவபெருமான் தழற்கண்தோன்றி
கொல்நுனைகொள் வேற்படையால் சூரபன்மன் அங்கம் இருகூறாச் செய்து
துன்னு விபுதரை விண்ணங்குடியேற்றி தோமின் மணம்
புணர்ந்த வென்றிப் பன்னிரண்டு திருக்கரங்கள்
உடைய அறு முகக்கடவுள் பாதம் போற்றி!

பொருள்:

ஈடற்ற கருணைக்கடலான ஈசன் கண்களில் தீச்சுடராக உதித்தவன்; கூர்நுனி வேலால் அசுரனை இரண்டாகப் பிளந்தவன்; தேவர்களை அவர் உலகில் குடியேறவைத்து தெய்வயானையை மணந்தவன்; வெற்றிவேலனுடைய பன்னிரு கைகளையும் ஆறு முகங்களையும் அவனுடைய பாதங்களையும் போற்றுவோம்.

19.   திருவிரிஞ்சைப் புராணம் - வாகை மலராக வள்ளிமணாளன் அடிகளில்:

அந்திப்போது அழகுறவே நடித்தருளும் வழித்துணைவர் அருளும் கோவை
வந்திப்போர் நினைத்தபடி மயிலேறி அயிலெடுத்து வரும் செவ்வேளைச்
சந்திப்போம் மலர் சொரிவோம் புகழ்ந்திடுவோம்
அவர்கமலத் தாளும் தோளும் சிந்திப்போம்
ஆதலினால் நமது பழவினைகள் எல்லாம் சிந்திப்போமே!

பொருள்:

மாலை நேரங்களில் அழகாக நடனமாடும் சிவபாலன் வேலேந்தி மயிலேறிவரும் முருகனை கண்டு மலர் தூவிபுகழ்ந்து பாடுவோம் அவன் திருவடிகளையும் தோள்களையும் நினைவில் வைப்போம். அதனால் நம் பழ வினைகள் அனைத்தும் சிதறி ஓடிவிடும். சிந்திப்போகும்!

20.   திருத்தணிகைப் பதிகம் - நந்திவட்ட மலராக நாதன் அடிகளில்:

நக்கீரர் அருணகிரிநாதர் முதல் அடியார்கள் நாடி என்றும்
சொக்கு ஈன்ற உனைப்பாடினார் அன்றே ஆறுமுகம் தோன்ற
என்னுள் புக்கு ஈந்து நல்லருளைப் புண்ணிய ஆறெழுத்து ஓதும்
பொருவில் ஞானம் மிக்கு ஏற அருள் கண்டாய்
தணிகை இடம் கொண்டு அருளும் வேத வாழ்வே!

பொருள்:

சொக்கலிங்கக்கடவுள் அளித்த செல்வன் உன்னை நக்கீரர் அருணகிரி போன்ற அடியார்கள் பாடினார்கள். நீ என்னுள்ளே புகுந்து நல்ல அருள் தந்து ஆறெழுத்து மந்திரத்தை ஓதும் அறிவாகிய ஞானம் பெற அருள் பாலிக்க வேண்டும் தணிகைமலையில் உறையும் வேதவாழ்வே! முருகா!

21.   திரு அருட்பா - புன்னைமலராகப் புனிதன் அடிகளில்:

முத்தியின் முதல்வ போற்றி,
மூவிரு முகத்த போற்றி,
சத்திவேல் கரத்த போற்றி,
சங்கரி புதல்வ போற்றி,
சித்தி தந்தருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி!
பத்தியின் விளைந்த இன்பப் பரம்பர போற்றி போற்றி!

பொருள்:

முத்திக்கு முதல்வனே ஆறுமுகத்தோனே! வேலாயுதனே உமை மைந்தனே! எண்ணியதை அருளும் தேவர் முடிமணியே பக்தியில் விளைந்த இன்பனே வணக்கம் வணக்கம்.

22.   பாரதிப் பாடல் - தாழைமடலாக தணிகைச் செல்வன் அடிகளில்:

வேடர் கனியை விரும்பியே தவ
வேடம் புனைந்து திரிகுவான் ... தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே முனி
நாதனுக்கு இன்மொழி கூறுவான் ... சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட இருள்
பார மலைகளைச் சீருவான் ... மறை
ஏடு தரித்த முதல்வனும் குரு
என்றிட மெய்ப்புகழ் ஏறுவான்.

பொருள்:

வள்ளிக்காக தவவேடம் புனைந்தவன் தமிழின் புகழ் விளங்க அகத்தியருக்குத் தமிழ் கற்பித்தவன் தேவர்கள் துயர் தீர மலையான அசுரனை வீழ்த்தியவன் வேதனாகிய பிரமனும் குரு எனப்பணியும் புகழ் மிக்கவன் யார்? முருகக்கடவுள்தான்!

23.   கலிங்கத்துப் பரணி - வள்ளி மலரால் வள்ளிமணாளன் அடிகளில்:

பொன் இரண்டு வரைதோற்கும்
பொருவரிய நிறம்படைத்த
புயமும் கண்ணும் பன்னிரண்டும் ஆறிரண்டும்
படைத்துடையான் அடித்தலங்கள் பணிதல் செய்வாம்.

பொருள்:

பொன்மலைகள் ஒன்றாக வந்தாலும் தோற்று ஓடிடும் அழகு கொண்ட பன்னிரு தோள்களும் பன்னிரு விழிகளும் உடைய முருகக்கடவுளது பாதங்களைப் பணிவோமாக!

24.   திருப்புகழ் - அசோக (பிண்டி) மலரால் அழகன் அடிகளில்:

ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே!
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்,
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

பொருள்:

மயிலேறும் அழகுமுகம் ஒன்று; தகப்பனுடன் பேசிடும் முகம் ஒன்று; அடியார்கள் வினைகளையும் முகம் ஒன்று; மலையைப்பிளந்த வேலேந்தும் முகம் ஒன்று; சூரரை அழித்த முகம் ஒன்று; வள்ளியை மணந்த முகம் ஒன்று; ஆனால் ஆறுமுகமானதன் உண்மைப்பொருளை நீதான் உரைக்கவேண்டும் திரு அண்ணாமலை உறையும் பெருமாளே!

25.   கந்தபுராணம் - கருங்குவளை மலராக கந்தன் அடிகளில்:

ஆறிரு தடந்தோள் வாழ்க; அறுமுகம் வாழ்க;
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க; குக்குடம் வாழ்க;
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க; யானைதன் அணங்கு வாழ்க;
மாறிலா வள்ளி வாழ்க; வாழ்க சீர் அடியாரெல்லாம்!

பொருள்:

பன்னிரு தோள்கள் வாழ்க; ஆறுமுகம் வாழ்க; மலைபிளந்த வேல் வாழ்க; சேவல் வாழ்க; மயில் வாழ்க; தெய்வயானை தேவியார் வாழ்க; வள்ளியம்மை வாழ்க; நல்லடியார் அனைவரும் வாழ்க!

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!